நடிகர் விக்ரம் ‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ பட வரிசையில் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ‘கோப்ரா’ என்ற தலைப்பு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு குஷிப்படுத்தவும் செய்தது. இதனை விக்ரம் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ரஜினிக்கு ‘தர்பார்’, ‘தலைவர் 168’, கமலுக்கு ‘இந்தியன் 2’, அஜித்துக்கு ‘வலிமை’, விஜய்க்கு ‘தளபதி 64’ என்ற வரிசையில் விக்ரமுக்கு ‘கோப்ரா’ எனப் பட்டையைக் கிளப்ப உள்ளது.
மேலும், விக்ரமை வைத்து சங்கர் இயக்கிய ‘அந்நியன்’, ‘ஐ’ படங்கள் போன்று இப்படமும் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவருவதாக தகவல்கள் உலாவருகின்றன.அதன்படி பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் அனைவரும் பல அதிக பட்ஜெட் படங்களில் பணியாற்றியவர்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கின்றன.
மேலும், சென்னையில் இதுவரை 50 விழுக்காடு படக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பாகங்கள் ரஷ்யா, ஐரோப்பா நாடுகளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி விக்ரம் தொடர்ந்து வித்தியாசமான டைட்டில்களைத் தேர்வு செய்து ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா விரும்பிகளையும் ‘மெர்சல்’ ஆக்கியுள்ளார்.