போலியான சான்றிதழ் மூலமாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ப.குட்டூர் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக மகாலிங்கம் என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற 1990-ஆம் ஆண்டில் பிளஸ்-2 படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பாக கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. பின்னர் மகாலிங்கம் வேலையில் சேரும் போது அளித்த சான்றிதழ்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் அவருடைய இடைநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் மகாலிங்கம் ப்ளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் அவர் பிளஸ்-2 தேர்வில் 972 மதிப்பெண்கள் பெற்றது போல் போலியான ஆவணத்தை தயார் செய்து பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கல்வித்துறை உயரதிகாரிகள் இந்த மோசடி பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அரசையை ஏமாற்றி ஆசிரியர் பணிக்காக போலி ஆவணத்தை தயார் செய்த மகாலிங்கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் மகாலிங்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.