சேலத்தை அடுத்துள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தை வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விழா மேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் அமரும் இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”வருகிற 9ஆம் தேதி தெற்கு ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக அமைய உள்ள கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிவைக்கவுள்ளதாகவும், இந்த கால்நடை பூங்கா மேலைநாடுகளில் உள்ளது போன்று அமைய இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டு இன மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்க்க, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற பல திட்டங்களும் இங்கு ஏற்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, பெரு விவசாயிகள் அனைவரின் வேளாண் வருமானத்தை அதிகரிக்க செய்ய பயிற்சியளிக்கவும், இந்த கால்நடை பூங்காவில் வழிவகை செய்ய உள்ளோம். விவசாயிகளின் வாழ்வாதாரமாக அமையவுள்ள இந்த பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இதில், கல்வியாளர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
தலைவாசலில் புதிதாக அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, இந்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு முதல்கட்டமாக 40 மாணவர்களுடன் தொடங்கும், பின்னர் அது எண்ணிக்கையில் அதிகப்படுத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு துறை செயலர் கோபால், கால்நடை துறை இயக்குனர் ஞானசேகரன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.