மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். இதனால் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் ரவி, ஆனந்தராஜ், பட்ட முத்து, வைகை செல்வன், ஆகியோர் இணைந்து மணல் கடத்த முயற்சிக்கும் நபர்களை டிரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் வெங்கடாம்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டிரோனை அப்பகுதிக்கு அனுப்பி கண்காணித்து உள்ளனர். அப்போது அங்கு நான்கு பேர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆசிர்வாதபுரம் பகுதியில் வசிக்கும் சாமுவேல், ஆரோக்கியசாமி, மகேஷ் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆரோக்கியசாமி, மகேஷ் கண்ணன், சாமுவேல் ஆகியோரை கைது செய்து தப்பி ஓடிய பாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.