ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தமிழக தொல்லியல்துறை குறித்த ஆய்வுகள் இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் மூன்று கட்ட அகழ்வாய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையினாலும் மற்ற நான்கு கட்ட ஆய்வுகளை தமிழ் தொல்லியல் துறையினாலும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதனால் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பண்டைய அகழ்வாராய்ச்சி என்ற தலைப்பில் கீழடி பெருமை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் கீழடி கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பழமையான நகரம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதில் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு, தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், கண்ணாடி மணிகள், செம்மணிகள், வெண்கலம் படிவம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்பு பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தங்கலால் செய்யப்பட்ட பகடை மற்றும் ரோம் நாட்டை சேர்ந்த பழங்காலத்து பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் வணிக தொடர்பு இருந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வு பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு பற்றிய தகவல் இடம்பெறாதது ஏன் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.