தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் பவானி. இவருக்கும் சுகித் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் சுகித்துக்கு வேறோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இது பவானியின் காதுக்கும் எட்டிய நிலையில்., தனது கணவரின் செயலை பவானி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணுடனான நட்பை துண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, கணவன்-மனைவி இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டு, கூடுதல் வரதட்சணை கேட்டு சுகித், பவானியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு பவானி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அமர்பேட் காவல் நிலைய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பவானியின் உடலை கைப்பற்றிய காவலர்கள், உடற்கூறாய்வுக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து சுகித் தலைமறைவாகி விட்டார். சுகித் மீது இந்திய தண்டனை சட்டம் 304 பி (வரதட்சணை கொடுமை, மரணம்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.