தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கேசவ் வாலிபர் போதை மயக்கத்தில் தன்னுடைய தாய், தந்தை, பாட்டி மற்றும் தங்கை ஆகியோரை கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது வாலிபருக்கு போதைப்பழக்கம் இருந்ததன் காரணமாக குடும்பத்தினருக்கும் வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் கேசவை அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீடு திரும்பிய கேசவ் குடும்பத்தினரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பணம் கொடுப்பதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தன்னுடைய தந்தை தினேஷ் (50), தாயார் தர்ஷனா, பாட்டி தேவானா தேவி (75), தங்கை ஊர்வசி சைனி (18) ஆகியோரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கேசவை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வசமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.