சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தில் மலைக் கிராம மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மலைகளில் கிடைக்கூடிய பொருள்களை மேம்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மலைவாழ் மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்’ என்றார்.