Categories
தேசிய செய்திகள்

ஐபோன் விலை ரூ. 50 ஆயிரம்… “சம்பளம் தர பணமில்லையா.?” ஊழியர்கள் செய்த காரியம்..!!

கர்நாடக மாநிலத்தில் சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக‌ குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது 15 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்க கூடிய இன்ஜினியரிங் முடித்த ஊழியர்களுக்கு 7ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை சம்பளம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் பணி முடிந்து வெளியே வந்த ஊழியர்கள் தொழிற்சாலையின் கண்ணாடி கதவுகள், மேஜை, நாற்காலி, கணினி, சிசிடிவி கேமரா, வாகனங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி, தீ வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நரசாப்புரா போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய 125 ஊழியர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பணி இடத்தில் வன்முறையில் ஈடுபட்டது, அலுவலக சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

மேலும் இந்தத்தாக்குதலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். மேலும் ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் வன்முறையை ஈடுபட்டதை ஆதரிக்க முடியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டு 680 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த கிளையில் சில லட்சங்களில் சம்பளம் வாங்க கூடிய ஊழியர்களுக்கு வழங்க முடியவில்லையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Categories

Tech |