பிரேசிலில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தவரின் ஐபோன் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எர்நெஸ்டோ கலியோட்டோ. இவர் ஆவணப்பட இயக்குனராகவும், இயற்கை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ரியோ டி ஜெனிரோ பகுதியிலுள்ள கோபோ ஃப்ரோ கடற்கரையில் தனது ஆவணப்படத்திற்க்காக ஹெலிகாப்டர் மூலம் பயணித்து தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஹெலிகாப்டரில் உள்ள ஜன்னல் கதவை திறந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரின் ஐபோன் கை தவறி கீழே விழுந்தது.
அவர் கையில் இருந்து சுமார் ஆயிரம் அடி தூரத்தில் போன் கீழே விழுந்ததால் அது உடைந்து விடும் என்று நினைத்தார். ஆனால் அங்கு நடந்ததோ வேறு, அவர் வானத்தில் இருந்து இறங்கியதும் தன் மொபைல் போனில் ஜிபிஎஸ் வைத்து அதை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் செல்போனும் கிடைத்துவிட்டது. அந்த இடத்திற்கு சென்ற செல்போனை எடுத்த போது அவர் பெரும் ஆச்சரியம் அடைந்தார்.
ஹெலிகாப்டரில் இருந்து தவறவிட்ட செல்போன் ஆயிரம் அடிக்கு கீழே விழுந்தும் கீறல் மட்டுமே இருந்தன. செல்போன் அவர் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தது. அவர் எடுக்கும் வரை வீடியோ பதிவாக கொண்டே இருந்துள்ளது. அவர் செல்போனை தவற விட்டு சுமார் ஒன்றரை மணி நேரமாக செல்போனில் வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது. அதே நேரத்தில் செல்போன் பேட்டரியும் 16% இருந்தது. இதை அவர் தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.