15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த சுழற்சிமுறையில் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மார்ச் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொண்ட 15 ஆவது ஐபிஎல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது ஐபிஎல்லில் பங்கேற்கவுள்ள 10 அணிகள் மோதும் முறையினை வெளியிட்டுள்ளார். அதாவது அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் மற்றும் அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் 10 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து மொத்தமுள்ள 70 லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் பங்கேற்கும். அதன்படி ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் 2 முறையும், எதிர் பிரிவிலுள்ள 4 அணிகளுடன் ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணிகளுடன் 2 முறையும் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.