இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், தற்போது வரை தனக்கென ஒரு தனிவழியில் பயணத்தை தொடர்ந்து வரும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ். காரணம் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றும், எட்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மூன்று முறை கோப்பையையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை அணியை, இரண்டு ஆண்டுகள் தடை செய்து பிசிசிஐ அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர் இரண்டு வருடம் தடை முடிந்து வந்த, முதல் சீசனிலேயே சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியது. ஏனெனில் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைவரது மனதிலும் சென்னை அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறுமா? என்ற கேள்வி எழத்தொடங்கியது.
காரணம் அப்போதிருந்த சிஎஸ்கே அணியில் ஒரு சிலரை தவிர்த்து மீதமிருந்த அனைவரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே. இதனால் சிஎஸ்கே அணியை ‘டாடிஸ் ஆர்மி’ என்று அழைத்தவர்களும் உண்டு. ஆனால் அப்படி அழைத்தவர்களுக்கு தொடரின் முடிவில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, அனைவரது வாயையும் அடைத்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசனிலும் சிஎஸ்கே அணி, தனது பழைய அணி வீரர்களை மட்டுமே சார்ந்திருந்தது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஒவ்வொரு வீரரும் குறைந்த பட்சம் 50 டி20 போட்டிகளிலாவது பங்கேற்ற அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.
இதனால் கடந்த ஆண்டும் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டது. பின்னர் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி ஐந்து வீரர்காளை வெளியேற்றி, சாம் கர்ரன், ஹசில்வுட், பியுஷ் சாவ்லா என பந்துவீச்சாளர்களை ஏலத்தில் எடுத்து, பந்துவீச்சை வலிமைப்படுத்தியது.
அதற்கேற்றவாரே இந்தாண்டு ஐபிஎல் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அது சிஎஸ்கே அணிக்கு சாதகமான முடிவாக அமைந்தது. ஏனெனில் சென்னை மைதானமும், ஐக்கிய அரபு மைதானங்களும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயனளிப்பவை. சென்னை அணி தனது பந்துவீச்சை வலிமைபடுத்தியதால் இந்தாண்டும் சென்னை அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை யாராலும் தடுக்க இயலாது.
இதற்கிடையில் சென்னை அணியின் ‘தல’ மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, இந்திய மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியளித்தார். அவர் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாத சிஎஸ்கே அணியினருக்கு மற்றொரு அதிர்ச்சியாக ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவும், தோனியுடனான பயணத்தில் இணைவதாக தெரிவித்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனால் தோனி மற்றும் ரெய்னாவை இனி இந்திய ஜெர்சியில் பார்க்க இயலாது என்ற சோகத்திலிருந்த ரசிகர்களுக்கு, தற்போது சிஎஸ்கே ஜெர்சியில் அவர்களை காணும் வாய்ப்புள்ளதை எண்ணி கொண்டாடி வந்தனர். அதிலும் அவர்களுக்கு பிரச்னை தான். ஏனெனில் சிஎஸ்கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி சொந்தவூர் திரும்பினார்.
இப்படி சென்னை அணிக்கு அடிமேல் அடி விழுவதைப் போல, இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங்கும் விலகி ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கினார். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த இருவர் தொடரிலிருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாத ஒன்று.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம்:
சிஎஸ்கே அணியின் முக்கிய பலமாக இருப்பவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஏனெனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்ட அத்தனை தொடர்களிலும், பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச்சென்ற பெருமை தோனியையே சாரும். மேலும் அவரது தலைமை, பேட்டிங்கில் காட்டும் அதிரடி, மிரள வைக்கும் கீப்பிங் திறன் என தனது பணியை சிறப்பாக செய்து வருபவர்.
பந்துவீச்சாளர்களை பக்கபலமாக கொண்ட சிஎஸ்கே அணிக்கு, இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது, மேலும் ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. காரணம் சிஎஸ்கே அணியில் இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், கரன் சர்மா, பியுஷ் சாவ்லா, சாய் கிஷோர் என அனைத்து வேரியேஷனை கொண்ட சுழற்பந்து வீச்சாளர்களையும் தன்னிடம் வைத்துள்ளது.
அதுபோல் வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்த மட்டியில் தொடர்ச்சியாக மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசக்கூடிய லுங்கி இங்கிடி, ஹசில்வுட் ஆகியோருடன் டுவைன் பிராவோ, சாம் கர்ரன், தீபக் சஹார், கே.எம் ஆசீப் என புதுமையை புகுத்தும் பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளது அணிக்கு கிடைத்த மிகப்பெரும் பலமாகவே தோன்றுகிறது.
பேட்டிங்கில் வழக்கம் போல் ஷேன் வாட்சன், முரளி விஜய், அம்பத்தி ராயுடு, பாப் டூ பிளேசிஸ் என சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பதினால் சென்னை அணி, ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
சிஎஸ்கே பலவீனம்:
சிஎஸ்கே அணியின் பலவீனமாக கருத்தப்படுவது அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகியது அணிக்கு பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஏனெனில், ரெய்னா போன்று ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் சென்னை அணியில் இல்லை. அதேபோல் அனுபவ பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் முடிவும் சென்னை அணிக்கு பாதகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஹர்பஜனின் பந்துவீச்சு எதிரணியாக சவால் நிறைந்தாகவே இருந்திருக்கும். இருப்பினும் இருப்பதை வைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் தலைவன் இருக்கும் வரை சென்னை அணிக்கு பலவீனம் என்பதை சுட்டிக்காட்ட இயலாது என்பதே நிதர்சனம்.
சிஎஸ்கே: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, பாப் டூ பிளேசிஸ், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கர்ரன், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், சாய் கிஷோர், மிட்செல் சாண்ட்னர், பியூஷ் சாவ்லா, கரன் சர்மா, ஹசில்வுட், லுங்கி இங்கிடி, கே.எம்.ஆசிப், ஜெகதீசன், மோனு குமார், ருத்ராஜ் கொய்க்வாட்.