மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ,தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ,கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மே 2-ம் தேதி வரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக , வெளிநாட்டில் மீதமுள்ள போட்டிகளை நடத்த திட்டமிட்டது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19 ம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 25 நாட்களுக்குள் மீதமுள்ள போட்டிகளை சார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய 3 இடங்களில் நடைபெறுவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.