IPL தொடரின் 15-வது சீசனில் நேற்று நடந்த 13வது போட்டியில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதிகொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ்வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலாவதாக பேட்டிங் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சம் ஜாஸ் பட்லர் 70 ரன்களும், ஹெய்ட்மர் 42 ரன்களும் எடுத்து குவித்தனர். பின் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டூபிளசிஸ் (29) மற்றும் அனுஜ் ராவத் (26) போன்றோர் சுமாரான துவக்கம் கொடுத்தனர்.
அதன்பிறகு களத்திற்குவந்த விராட் கோலி (5), டேவிட் வில்லே (0) மற்றும் ரூத்தர்போர்ட் (5) போன்றோர் வந்த வேகத்தில் வெளியேறி விட்டனர். அதனை தொடர்ந்து இணைந்து கொண்ட தினேஷ்கார்த்திக்-சபாஷ் அகமத் ஜோடி தங்களது ஆட்டத்தின் வாயிலாக பெங்களூர் அணியை சரிவிலிருந்து மீட்டது. அதாவது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபாஷ் அகமத் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். இதில் சபாஷ் அகமத் விக்கெட்டை இழந்த பிறகும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்ததன் வாயிலாக 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாகவும் முடித்து கொடுத்த தினேஷ் கார்த்திக்கே இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அவ்வாறு ஆட்டநாயகன் விருது வென்ற பின் அவர் பேசியதாவது “கடினமாக உழைத்துள்ளேன். சென்ற ஆண்டுகளில் நான் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து கொண்டே இருப்பேன். இதற்கிடையில் எவ்வளவு சொதப்பினாலும், இது முடிவு அல்ல என்பதனை என்னிடம் நான் சொல்லி கொண்டே இருப்பேன். தனக்கு சில லட்சியங்கள் இருப்பதால், அதை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியது என் கடமை ஆகும். ராஜஸ்தான் அணிக்குஎதிரான இப்போட்டியில் 1 ஓவருக்கு குறைந்தது 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை முடிவு நேரத்தில் ஏற்பட்டது. இது சவாலான ஒன்று என்றாலும் இதை செய்துதான் ஆக வேண்டும். அதற்கான வழியை கண்டறிய பொறுமையை கையாள வேண்டும் அதைதான் நானும் செய்தேன்” என்று தெரிவித்தார்.