Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :வீரர்களை தக்க வைக்க இன்றே கடைசி நாள் ….! தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் ….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ….!!!

ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன்  நிறைவடைகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனிடையே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில்4  வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.இந்நிலையில் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதனால் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது .

இதனிடையே ஐபிஎல் அணிகள் எந்தெந்த  வீரர்களை தக்கவைக்க போகின்றார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா ,அக்‌ஷர் பட்டேல், அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளது .அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா ,பும்ரா ,பொலார்ட் ,இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதைப்போல் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ,மொயின் அலி ஆகியோர் இடம் பெறுவார்கள் .அடுத்ததாக கொல்கத்தா அணியில்  வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள் .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக சஞ்சு சாம்சனும் , ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தக்கவைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அதேபோல் ஆர்சிபி அணியின் விராட் கோலி ,மேக்ஸ்வெல் இருப்பது உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் ,ரஷீத் கான் ஆகியோர் அணியில் இருப்பார்கள் என நெருங்கிய வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் ஏலத்துக்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது .அணியில் மற்ற வீரர்களான அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன் ஆகியோரில் ஒரு சில வீரர்களை  பஞ்சாப் அணி தக்கவைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது.

Categories

Tech |