ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற சந்தேகத்திற்கு அதன் தலைவர் விளக்கமளித்துள்ளார்
கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் தொடர்ச்சியாக ஊரடங்குஅமலில் இருந்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகின்றது. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறியதாவது “செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது ஐசிசி முடிவிலேயே உள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தாவிட்டால் அன்றைய தேதிகளை ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனவே ஐசிசியின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்” எனக் கூறினார். இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான், “ஆசியக் கோப்பை போட்டிகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்லது இலங்கையில் வைத்து நடத்துவதற்கு யோசித்து உள்ளதாக” தெரிவித்தார். தற்போது மீண்டும் விளக்கமளித்த வாசிம்கான் ஐபிஎல் போட்டிகள் குறித்த முறையான அறிவிப்பு வந்தால் ஆசிய கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.