இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இல்லமால் காலி மைதானத்திலாவது ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச்25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் முடிவடைந்த ஊரடங்கு மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
மேலும் அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 5ம் கட்டமாக தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் மதிய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியது. அதில், 50% ஊழியர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி, தனிக்கடைகள், மால் அல்லாத வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, கோயிகள் திறக்க அனுமதி, மது கடைகளுக்கு அனுமதி, ஹோட்டல்களில் உணவருந்த அனுமதி, சலூன் கடைகளுக்கு அனுமதி என நிபந்தனைகளுடன் தளர்வுகள் வழங்கப்பட்டன.
அதேபோல, ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்கில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தற்போது வரை எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற கிரிக்கெட் தொடர். இந்த வருடம் நடைபெறவிருந்த இந்த தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை நடத்தி வருவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.