சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.
12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டோனி 46 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன் பின் போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 46(26) ரன்கள் விளாசினார். இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னனை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் இந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்வியை அடைந்தது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கின் போது ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானேவுக்கு 12,00, 000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்தது. ஏற்கனவே ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்த நிலையில் அபராதமும் விதிக்கப்பட்டதால் அந்த அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது.