ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியாவில் 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி தொடங்கி, நடைபெற்று வந்தது. முதலில் சென்னை , மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் தள்ளிவைக்கப்பட்டது. இதில் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ,மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகின்ற ஜூன் 2 ம் தேதி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் செப்டம்பர் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அட்டவணையில், செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் டெஸ்ட் தொடர்களை முடிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெஸ்ட் தொடர் முன்னதாகவே முடிந்துவிட்டால், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் 15 ம் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வருகின்ற 29ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் .