பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்க செருப்பை வைத்த சம்பவம் பேரூராட்சி அலுவலருக்கு ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மண்டபத்தில் விரைந்து குவிய தொடங்கிவிட்டனர். அங்கு கூட்டமாக நின்ற பொதுமக்களை பேரூராட்சி அலுவலர் சமூக இடைவெளிவிட்டு தனித்து நிற்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து அலுவலர் கூறியதை கண்டுகொள்ளாத பொதுமக்கள் டோக்கன் பெறுவதற்காக அவர்களது காலணிகளை சமூக இடைவெளி விட்டு வைத்து மக்கள் கூட்டமாக நிற்கின்றனர். இதைப் பார்த்த பேரூராட்சி அலுவலர் இப்படி பொதுமக்கள் பொறுப்புணர்வு இல்லாமல் இருந்தால் கொரோனா தொற்றை குறைக்க முடியாது என ஆதங்கத்தில் கூறியுள்ளார்.