ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 பணம் மற்றும் 14 மளிகை பொருட்களுக்கான டோக்கன்களை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகின்ற 15ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் 14 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளதால் அதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வீடுகளுக்குச் சென்று தராமல் பொதுமக்களை ஒரு இடத்தில் கூட்டமாக கூடி வரச் செய்து அவர்களுக்கு டோக்கன்களை வழங்கியுள்ளனர். இதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் இவ்வாறு பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு டோக்கன்களை பெற்று செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்க மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.