இந்தியாவில் இந்திய தபால் துறையால் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இயங்கி கொண்டு வருகிறது. இந்த வங்கியானது “வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை” என்ற நோக்கத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. இது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட வகை வங்கி கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேசிக் சேவிங்ஸ் என்ற அடிப்படையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவு வைக்க உச்சவரம்பு எதுவும் கிடையாது. பேசிக் சேவிங்க்ஸ் தவிர்த்து மற்ற சேமிப்பு கணக்குகளில் அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்குமேல் வரவு வைக்கப்பட்டால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஒரு பரிவர்த்தனைக்கு 0.50% அல்லது 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று சேமிப்பு மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 25,000 ரூபாய் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
மேலும் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50 சதவீதம் அல்லது 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பேசிக் சேவிங்க்ஸ் அல்லாத பிற வகை கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு முதல் 4 முறை சேவை கட்டணங்கள் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50 சதவீதம் அல்லது 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையும் வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.