யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் என ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் நாட்டில் இஸ்பஹான் மாகாணத்தில் நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையை கட்டுவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அதனை கண்டுகொள்ளாமல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை திரும்பவரும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டுவதற்காக ஐ.ஆர்.6 ரக மையவிளக்குகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று அந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஆலையின் ஒரு பகுதி முற்றிலுமாக எரிந்து விட்டது. ஆனால் நல்லவேளையாக உள்ளே பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆலையின் விபத்துக்கு இஸ்ரேல் சைபர் தாக்குதலே காரணம் என ஈரான் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.