Categories
உலக செய்திகள்

“வல்லரசு நாடுகளை வறுத்தெடுக்கும் ஈரான்”…. தடையை மீறி விண்ணில் பறந்த ராக்கெட்…. பரபரப்பு….!!!!

ஈரான் நாடு ஐ.நா.வின் தடையை மீறி ராக்கெட் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் ஈரான் வெகு தொலைவில் உள்ள நட்பு நாடுகளை கூட அணு ஆயுதங்களை ஏந்தி தாக்கும் வகையில் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை மேம்படுத்தி வந்ததை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தது.

இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்ய கூடாது என்று தடை விதித்தது. மேலும் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை ஒடுக்கும் விதமாக அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது.

அந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் தங்கள் நாட்டின் ‘அணுசக்தி திட்டங்கள்’ அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனையை ஏற்றுக்கொண்டது. அதற்கு பதிலாக வல்லரசு நாடுகள் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கின.

ஆனால் ஒபாமாவுக்கு பிறகு அமெரிக்காவில் அதிபராக ஆட்சி பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து ஈரான் நாடும் ஒப்பந்த நிபந்தனைகளை படிப்படியாக மீற தொடங்கியது. அந்த வகையில் அணு ஆயுத எரிபொருளாக பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு 4 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் அணுசக்தி விவகாரம் தொடர்பில் வல்லரசு நாடுகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈரான் ஐ.நா.வின் தடையை மீறி ராக்கெட் சோதனை நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒவ்வொரு ராக்கெட் சோதனையின் போதும் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஈரான் நடத்திய இந்த புதிய ராக்கெட் சோதனையால் அணுசக்தி ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படுமோ ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Categories

Tech |