கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது
ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி கடந்து செல்கின்றது.
நேற்று ஈரான் கடற்படை பயிற்சிகளின் பொழுது ஓமான் வளைகுடாவில் இருக்கும் ஈரானுக்கு சொந்தமான தெற்கு ஜாஸ் துறைமுகத்தின் சுற்றளவில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. ஈரான் கடற்படையை மேற்கோள்காட்டி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் பலர் காயம் அடைந்தார் என்றும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் ஈரானின் ஆயுத படைகள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்துகின்றன.
ஈரான் கடற்படையில் 2018 ஆம் ஆண்டு இணைந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான கொனாரக் மீது ஏவுகணை தாக்கியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் சூழ்நிலைகள் தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு உட்பட்டு உள்ளன எனவும் தெரிவித்துள்ளது. கப்பல் பயிற்சியில் இருந்த பொழுது தற்செயலாக மற்றொரு கப்பலான கொனாரக் மீது ஏவுகணையை ஏவி விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஈரானின் மௌட்ஜ்-வகுப்பு போர்க்கப்பல் ஜமரன் தற்செயலாக ஏவுகணை மூலம் கொனாரக் கப்பலை தாக்கியது என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.