அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்திய வம்சாவளி எழுத்தாளரை தாக்கிய நபரை ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
அமெரிக்க நாட்டின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். உடனடியாக, அவரை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேச முடியாமல் இருக்கிறார். மேலும், அவர் கண் பார்வையும் பறிபோகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய நபருக்கு பாராட்டுக்களை கூறியிருக்கிறது.
இது குறித்து நாட்டின் ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியில், நியூயார்க் மாகாணத்தில் விசுவாச துரோகியான தீய சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கிய வீரமான கடமைமிகுந்த நபருக்கு ஆயிரம் பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஆண்டவரின் எதிரியுடைய கழுத்தை கிழித்த நபரின் கைகளுக்கு முத்தம் தர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
அதாவது 1988 ஆம் வருடத்தில், சல்மான் வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவலில் சில உள்ளடக்கங்கள் நபிகள் நாயகம் குறித்து சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே, ஈரான் போன்ற பல முஸ்லிம் நாடுகள் அவர் மீது கோபமடைந்தது. இது மட்டுமல்லாமல் ஈரான் நாட்டின் மத அமைப்பு ஒன்று, அவரின் தலையை துண்டித்து வருபவருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.