ஈரான் நாட்டின் புரட்சிப்படையினுடைய இன்னொரு தளபதி இன்று மர்மமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் ராணுவத்தில் புரட்சி படை அமைப்பு இருக்கிறது. அந்நாட்டின் நலனுக்காக இந்த படை, பிறநாடுகளில் பல ராணுவ அரசியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், குவார்ட்ஸ் என்னும் சிறப்பு படையும் இந்தப் புரட்சிப்பிரிவில் இருக்கிறது.
இந்த குவார்ட்ஸ் பிரிவானது, பிற நாடுகளில் ரகசியமாக ராணுவ நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது. இதில், ஈரான் நாட்டின் எதிரி நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்வது போன்ற பல நடவடிக்கைகளை இந்த குவார்ட்ஸ் படைப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், இந்த குவார்ட்ஸ் பிரிவினுடைய ஒரு இராணுவ அதிகாரி இன்று மர்மமாக மரணமடைந்திருக்கிறார்.
இந்த பிரிவின் கர்னல் அலி இஸ்மாயில் சாதிக். இந்நிலையில், இவர் தன் குடியிருப்பில் மர்மமாக மரணமடைந்திருக்கிறார். அவர் மரணமடைந்தது குறித்த தகவலை ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் குவாட்ஸ் பிரிவு, இஸ்மாயில் சாதிக்கின் மரணத்திற்கு இஸ்ரேல் நாட்டின், மொசாட் என்னும் உளவுத்துறை காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறது.