ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
ஓமன் கடலில் இஸ்ரேலின் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை அன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் ( ருமேனியா, பிரித்தானிய நாட்டவர்) கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஈரான் தான் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.
ஆனால் ஈரான் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஈரான் தான் செய்த செயலுக்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய திங்கட்கிழமை அன்று ஈரானிய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதன் பிறகு ருமேனியாவின் உயர் தூதர் மற்றும் பிரிட்டிஷ் பொறுப்பாளருக்கு ஈரான் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான Saeed Khatibzadeh ஈரான் தேசிய நலன்கள் மற்றும் தனது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த தயக்கமும் காட்டாது. தனது நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் உடனடியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.