நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழாத்தூர் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர்கள் சேதம் ஆகாமல் இருக்க விளைநிலத்தில் உணவு தானியங்களுடன் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இந்நிலையில் விஷம் கலந்த உணவு தானியங்களை சாப்பிட்ட 4 மயில்கள் நிலத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து இறந்து போன மயில்களை பார்த்த வெங்கடேசன் யாருக்கும் தெரியாமல் நிலத்திலேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.
இதனை அறிந்த கீழாத்தூர் கிராம பொதுமக்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமாரிடம் தெரிவித்துள்ளனர். இவர் ஆரணி வனச்சரக அலுவலர் செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர், வனத்துறையினர் ஆகியோர் மயில்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியில் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மயில்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அருள்நாதன் உத்தரவின்படி 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.