கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவை தவிர்த்து அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தற்போது சீனாவில் முன்பை விட கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஈரானில் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை மொத்தம் 354 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் 9000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், வீட்டிலேயே இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.