அணுசக்தி தலைவர் ஈரான் நாட்டிற்கு அணுகுண்டை தயாரிக்க கூடிய திறன் இருப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் அரசு தங்களின் அனுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்களை தயாரிக்க போவதில்லை என்று உறுதிப்படுத்தவும் அதற்கு மாற்றாக அந்நாட்டின் மீது அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்கவும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் 2015 ஆம் வருடத்தில் ஒப்பந்தம் செய்தன.
அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. மேலும், ஈரான் நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட நிபந்தனைகளை ஈரான் மீறிக் கொண்டிருக்கிறது.
எனவே இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் இஸ்ரேல் அரசு, அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரானின் அணுசக்தி தலைவரான முகம்மது எஸ்லாமி, தங்கள் நாட்டிற்கு அணுகுண்டை தயாரிக்க கூடிய தொழில்நுட்பத் திறன் இருக்கிறது. எனினும் அதற்குரிய திட்டம் இல்லை என்று தெரிவித்தார். அவரின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.