கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன.
இதனால், அவர் காத்மண்டுவிலுள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என அவர் கூறினார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது. இதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுள்ளார். அதனால், கவலையளிக்கும் வகையிலான பிரச்னைகள் ஏற்படாது என நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்பு, உடல்நலம் தேறிய அவர் மருத்துவமனையிலிருந்து பூரண குணம் பெற்று திரும்பினார். அவருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனையின் தகவல் அதிகாரி ராம் பிக்ரம் அதிகாரி கூறியுள்ளார். நேபாளத்தின் முதல் பெண் அதிபரான அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு முதன்முறையாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்பு 2-வது முறையாக கடந்த 2018-ஆம் ஆண்டு மீண்டும் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகின்றது.