ஈராக் பிரதமர் இல்லத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அந்நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) பிரதமர் இல்ல கட்டிடத்தை தாக்கியதில் 6 பாதுகாவலர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த தாக்குலில், எந்தவித பாதிப்புமின்றி தப்பிய ஈராக் பிரதமர், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் பிரதமரை கொலை செய்ய நடைபெற்றதாக இராணுவம் தெரிவித்தது. அதோடு, இந்த சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில், ஈராக் பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் உட்பட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது, இந்த தாக்குதலை அந்நாட்டின் ஷியா போராளிகள் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.