கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 57 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இடுக்கி மாவட்டம் மூணாறு நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜமலா தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பெட்டி முடி குடியிருப்பில் நேற்று அதிகாலை மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்புகளில் வசித்து வந்த தமிழர்கள் 80க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆனால் மேலும் 57 தொழிலாளர்களை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நேற்று இரவு 7:30 மணியளவில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கின.
இந்த பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் அரக்கோணத்திலிருந்து சென்றுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநில பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மண்ணில் புதைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதால் 57 பேரும் இறந்துருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன்அறிவித்துள்ளார். தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே வயநாடு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் மேப்பாடி முண்டக்கை என்ற இடத்தில் மண்ணில் புதைந்த 21 பேரின்கதி என்னவென்று தெரியவில்லை.