இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமானது நேற்று அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. முன்னதாக நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கடத்திக்கொண்டு சென்ற விமானங்களில் இரண்டை நியூயார்க் நகரத்தில் இருக்கும் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள இரட்டை கோபுரங்களின் மீதும் ஒரு விமானத்தை வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் மீதும் மோதி வெடிக்க செய்தனர்.
மேலும் நான்காவது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் விழுந்து சிதறியது. இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3000 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் இரட்டை கோபுரத்தில் அமைந்துள்ள 110 அடுக்கு மாடியும் தகர்ந்து தரைமட்டமானது. இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் ஷேக் முகமது ஆவார். இந்த தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு பிறகு இவர் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் மறைந்திருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் அமெரிக்க ராணுவத்தினரால் பிடிபட்டார்.
பின்னர் கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவிற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார். அன்றிலிருந்து அவர் அங்கேயே தங்கியிருக்கிறார். இது குறித்து நியூயார்க்கின் முன்னாள் அமெரிக்க வழக்கறிஞரான டேவிட் கெல்லி கூறியதாவது “இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தொடர்ந்து தவறி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு மோசமான அனுபவம் ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் அமெரிக்க வழக்கறிஞர் டேவிட் கில்லி தான் இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நீதித்துறையின் விசாரணைக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனை கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 தேதி அமெரிக்க கடற்பறை கொன்றது. பின்னர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளியான அய்மன் அல் ஜவாஹிரி கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஆப்கான் தலைநகரான காபுலில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.