குற்றசம்பவத்தை குறைக்க சென்னை அடையார் காவல்துறை அதிகாரிகள் எடுத்த புதிய நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் அதிக அளவில் ரோந்து பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே குற்ற சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் பொதுமக்களால் உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை. தற்போது இதற்கு சிறந்த தீர்வாக, அடையாறு எல்லைக்கு உட்பட்ட காவல் பகுதியில் இரவு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் டிசிபி அடையார் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அவர்களது மொபைல் எண்களுடன் அவர்கள் எந்தத் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி சம்பந்தப்பட்ட தெருவில் உள்ள மக்கள் அவர்களது தெருவில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், குற்ற சம்பவங்களை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை வைத்துள்ளனர்