Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvENG : DLS முறையில் வென்ற அயர்லாந்து… “இந்த வெற்றி கேம் ஸ்பிரிட்டில் சேருமா?”…. இங்கிலாந்தை கலாய்த்த அமித் மிஸ்ரா.!!

அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) தோற்கடித்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இங்கிலாந்தை விமர்சித்தார்.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நேற்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பால் பிர்னி 47 பந்துகளில் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) 62 ரன்கள் எடுத்தார். மேலும் டக்கர் 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே ஜோஸ் பட்லர் 0, அலெக்ஸ் ஹேல்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி  14.3 ஓவரில் 105/5 ரன்கள் எடுத்திருந்தது. மொயின் அலி அதிரடியாக 12 பந்துகளில் 24* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2022 போட்டியில் மழையைத் தொடர்ந்து அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) தோற்கடித்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இங்கிலாந்தை விமர்சித்தார். அவர் ட்வீட் செய்துள்ளார், அதில், “ஒரு மகத்தான வெற்றிக்கு அயர்லாந்து அணிக்கு வாழ்த்துக்கள். DLS மூலம் வெற்றி பெறுவது கேம் ஸ்பிரிட்டில் சேராது என்று இங்கிலாந்து கூறாது” என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ‘மன்கட்’ முறையில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை அவுட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவானது. ஐசிசி விதிகளின்படி நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் பேட்டிங் செய்பவர்கள் பந்து வீசுவதற்கு முன்பே கோட்டை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்பது விதிமுறை. அதன்படியே அவர் அவுட் செய்திருந்தார்.

ஆனாலும் இது கிரிக்கெட் ஆன்மாவிற்கு எதிரானது, கேம்ஸ் ஸ்பிரிட்டில் இது சேராது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விமர்சனம் செய்திருந்தனர். சமீபத்தில் கூட ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்  இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் ‘மன் கட்’ முறை குறித்து பேசியிருந்தார். அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.  இதனை மனதில் வைத்துக் கொண்டு தற்போது அமித் மிஸ்ரா ட்விட் செய்துள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |