தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது அயர்லாந்து அணி.
கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டிஸ் அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் களமிறங்கினர். இதில் மேயர்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதன்பின் நல்ல தொடக்கம் கொடுத்த ஜான்சன் சார்லஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து வந்த எவின் லூயிஸ் 13, நிக்கோலஸ் பூரன் 13, ரோவ்மன் பவல் 6 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதற்கிடையே மிடில் வரிசையில் இறங்கிய பிராண்டன் கிங் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.. கடைசியில் கிங்குடன் ஓடியன் ஸ்மித் சற்று அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. பிராண்டன் கிங் 48 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) 62 ரன்களுடனும், ஓடியன் ஸ்மித் 19 (12) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 150 ரன்களை தாண்ட முடியவில்லை.. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கரேத் டெலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டர்லிங் மற்றும் கேப்டன் பால்பிர்னி ஆகியோர் களமிறங்கினர்.. இவர்கள் இருவருமே தொடக்கத்திலிருந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை பவுண்டரி, சிக்ஸர் என இருவரும் மாறி மாறி அடித்து நிலைகுலைய செய்தனர். விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய விண்டீஸ் 8ஆவது ஓவரில் தான் முதல் விக்கெட்டை (73/1) எடுத்தது. நன்றாக ஆடிவந்த பால்பிர்னி 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின் வந்த டக்கர் ஸ்டர்லிங் உடன் கைகோர்க்க இருவரும் சிறப்பாக ஆடினர். ஸ்டர்லிங் அரைசதம் அடித்தார்..
அதன்பின் வெஸ்ட் இண்டிஸ் அணியால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, தொடக்கத்திலிருந்து பவர் பிளேயரில் அதிரடியாக வெளுத்து வாங்கியதால் கிட்டத்தட்ட வெஸ்ட் இண்டீஸ் தோல்வி உறுதியானது. இறுதியில் 17 வது ஓவரில் 148 ரன்கள் எடுத்து அயர்லாந்து வெற்றி பெற்றது. ஸ்டர்லிங் 48 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 66 ரன்களுடனும், டக்கர் 35 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்..
இதன் மூலம் குரூப் பி பிரிவில் உள்ள அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. விண்டீஸ் அணி பரிதாபமான நிலையில் வெளியேறி உள்ளது. அடுத்த கடைசி தகுதி சுற்று போட்டியில் போட்டியில் இதே மைதானத்தில் ஸ்காட்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளது. ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியினர் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Ireland are through to the Super 12 🎉
A comprehensive performance in Hobart sees them knocking West Indies out of the tournament#T20WorldCup |#IREvWI | 📝: https://t.co/LNaSAJSEKW pic.twitter.com/iT0mYvnNzP
— ICC (@ICC) October 21, 2022