ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்ப முடியும் என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கூறியது.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஐரோப்பா, தடுப்பூசி நிறுவனத்தின் இந்த பதிலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது . இதன் காரணமாக பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula Von Der Leyen-க்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடந்த வார ஞாயிற்றுக்கிழமை 7 தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதற்கு பின்பு மார்ச் மாதத்தின் இறுதியில் கூடுதலாக 9 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக Ursula Von Der Leyen கூறினார். இருப்பினும் 40 மில்லியன் டோஸ் தடுப்பூசி என்பது ஐரோப்பா அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் கேட்ட தடுப்பூசிகளில் பாதி அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.