ராணுவ படைகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்ததில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
ஈராக் நாட்டில் சென்ற 2014 ஆம் ஆண்டு IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது ராணுவ படைகளை அங்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு அனுப்பட்ட ராணுவ படைகள் ஈராக்குடன் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு IS தீவிரவாதிகளை தோற்கடித்தது. இந்த நிலையில் IS தீவிரவாதிகளின் ஆதிக்கம் அந்த நாட்டில் மீண்டும் தலைதூக்கியதால் அமெரிக்கப் படைகள் அங்கேயே தங்கியுள்ளன. இதனால் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள IS தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் படைகளை குறிவைத்து தாக்குகின்றன. இதனை அடுத்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று ஈராக் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் ஈராக்கில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருவரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டின் டிசம்பர் 31-க்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதும் வாபஸ் பெறப்படும் என ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை அதற்கு முன்பு குறைக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது ஈராக் நாட்டில் 2500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.