மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவு பெற்றதாகவும் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து கல்லூரி முன்பு இருக்கும் செங்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது அவர்கள் கூறியதாவது, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள். இதன்பின் போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.