அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ,
திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான நம்பிக்கை கொண்டவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்ற திராவிட இயக்க முன்னோடி தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும் கொண்டிருந்தவரும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்குடன் இணைந்து அரசியலில் பயணித்தவரும், திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம் .
தமிழ் பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி, மக்கள் ஆட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவர். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமைச்சராகவும் , உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையும், பெருந்தன்மை உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்புயும் கண்டு வியந்திருக்கிறேன்.
75 ஆண்டுகள் பொதுவாழ்வில் பங்குபெற்று அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பேராசிரியர் அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடம் முன்னேற்றக் கழகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.