இரும்பு கம்பிகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் அரசு சுகாதார மைய கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வளாகத்தில் இருந்த கட்டிடம் கட்ட பயன்படும் இரும்பு கம்பிகளை 2 பேர் சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்டிட மேஸ்திரி மாது என்பவர் புதிய ஆட்கள் சரக்கு ஆட்டோவில் இரும்பு கம்பிகளை கொண்டு செல்வதை பார்த்து ‘யார் நீங்கள்? வாகனத்தை நிறுத்துங்கள்’ என சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் மாது தனது மோட்டார் சைக்கிளில் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பருவாய் கிராமத்தில் வசிக்கும் விக்னேஸ்வரன், ராமர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து இரும்பு கம்பிகளை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.