இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை 6 நபர்கள் சேர்ந்த மர்ம கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மர்ம கும்பல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். இதில் வாலிபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அவர் தொடர்பான விவரங்களை விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வெள்ளவேடு பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் என்பதும், அதே பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் அவர் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஸ்டீபன் ராஜ் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமா என பல கோணத்தில் காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.