இனியும் ஊரடங்கு தேவைதானா என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நாடெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிகுந்த அளவு பொருளாதார இழப்பை நாடு சந்தித்திருக்கிறது. மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பணிகளுக்கு செல்ல முடியாமல் பலர் வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் இந்த ஊரடங்கு நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பெற்று விட்டதால் ஆகஸ்ட் 31க்கு பிறகு ஊரடங்கு வேண்டுமா? என அரசு பரிசீலிக்க வேண்டுமென கமலஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைத்தால் பொருளாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமில்லாமல், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான கட்டத்துக்கு செல்ல வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.