பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து எங்களுக்கு எதிராகச் சதி வேலை செய்து, எங்களில் மூவரின் இறப்புக்குக் காரணமாக இருந்த பவனுக்கு நாங்கள் அளித்த பரிசு இது என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
காட்டில் புதைக்கப்பட்ட உடலை கைபற்றிய காவல் துறையினர், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேட தனிப்படை அமைத்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் எனவும் காவல் உயர் அலுவலர் சிங் கூறியுள்ளார்.