பறக்கும் ரயிலில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த காந்திலால் மகன் ஜெகதீஷ்(18) என்பவர் ரயில் சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து திடீரென கீழே குதித்தார்.
சாலையில் விழுந்த ஜெகதீஷின் தலைப்பகுதியில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞன் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?அல்லது பெற்றோர்கள் திட்டியதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்தானா ? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.