Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு கொந்தளிக்க ’நான் பத்திரிகையில் பார்த்தைத்தான் சொன்னேன். பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. இது மறுக்கக்கூடிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம்’ என்று ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினியின் இந்த தீர்க்கமான பேச்சுக்கு மேலும் எதிர்ப்பு வலுத்தது. அவருக்கு பாஜகவின் துணை இருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் நிலைப்பாடு என்னவென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி

துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தந்தை பெரியார் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னை போன்ற எளியவர்கள் இந்த நிலைமைக்கு வர பெரியார்தான் காரணம். எனவே அவர் கருத்துக்கள் குறித்து பேசும்போது முழுமையாக தெரிந்துகொண்டு பேசவேண்டும் என தனது எதிர் குரலை எழுப்பினார்.

அதேபோல், அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழ்நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற தலைவர் பெரியாரைப் பற்றி அவதூறாக ரஜினிகாந்த் பேசியிருப்பது நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனத்தை பதிவு செய்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

மேற்கொண்டு அமைச்சர் பாஸ்கரன், பாஜகவிடமிருந்து நாங்கள் தனியாக செல்வதற்கு எந்த நேரம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று புதிய பரபரப்பை பற்றவைத்தார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அதிமுக – பாஜக கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது என்று பல்டி அடித்தார். இருந்தாலும், ரஜினியின் பேச்சுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துவரும் சூழலில் பாஸ்கரன் இப்படி பேசியதுதான் கட்சியினர் பலரின் குரல் என்று கூறப்பட்டது.

அமைச்சர் பாஸ்கரன்

அமைச்சர் செல்லூர் ராஜு ஒருபடி மேலே போய் இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது. ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார்தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அதிரடியை கிளப்பினார்.

செல்லூர் ராஜு

அதிமுகவை பாஜகவும், குருமூர்த்தியும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பரவலாக பேச்சு அடிப்பட்டுவரும் சூழலில், ரஜினிக்கும் குருமூர்த்தி தரப்புதான் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்திருக்கும் என்று பேசப்பட்டுவரும் நிலையில், ”ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று செல்லூரார் பேசியிருப்பதை இங்கு முக்கியமாக பார்க்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் மக்களவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக படுதோல்வியடைந்ததற்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என்ற மனப்பான்மை கட்சிக்குள்ளேயும், வெளியேயும் பரவலாக எழுந்திருக்கிறது. அதே மனப்பான்மையில்தான் தாங்களும் இருக்கிறோம் என்பதை பாஸ்கரன் மற்றும் ராஜுவின் பேச்சு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உணர்த்தியிருப்பதாகவே தெரிகிறது.

ஜெ, வாஜ்பாய், மோடி

இப்படிப்பட்ட சூழலில், மோடிக்கு எதிராக தனியாளாக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அரசியல் களமாடிய ஜெயலலிதாவின் கட்சியில் இருந்துகொண்டு, மோடி எங்களின் டாடி என்று கூறி ரத்தத்தின் ரத்தங்களை கொதிக்க வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. ரஜினி ரசிகர்கள், இந்த பிரச்னையில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளது. பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. திராவிடர் கழகத்தினர் ரஜினியை மிரட்டி பார்க்கின்றனரா? ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியை திருமணம் செய்தவர்” என்றெல்லாம் பேசி ரஜினிக்கு ஆதரவு பத்திரம் வாசித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவுடனான கூட்டணியை முறிக்கும் எண்ணத்தில் கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதையே இது உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, இந்த விவகாரத்தில் இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காத சூழலில், ராஜேந்திர பாலாஜி முதலமைச்சரின் குரலாக இருக்கலாம் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

இப்படியே ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருக்கும் அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைக்கு ஆளாகுமோ என்ற அச்சம் அதிமுகவினர் மத்தியில் பரவியிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதிமுக தொண்டர்கள்

அதுமட்டுமின்றி, ’நான் இறந்த பிறகும் 100 வருடங்களுக்கு அதிமுக என்ற கட்சியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது’ என ஜெயலலிதா சட்டமன்றத்தில் முழங்கினார். ஆனால் ராஜேந்திர பாலாஜி போன்றோரின் பேச்சை கேட்கும்போதும், ஜெ மறைவுக்கு பிறகு கொள்கை ரீதியிலான அதிமுகவின் அணுகுமுறையை பார்க்கையிலும் இது அதிமுகவா இல்லை மோ(டி)திமுகவா என்று ரத்தத்தின் ரத்தங்கள் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Categories

Tech |