தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். சமீபத்தில் நவீன மயமாக்கப்பட்ட பாபா படத்தின் டிரைலர் வீடியோவை நடிகர் ரஜினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு இது என் இதயத்திற்கு நெருக்கமான படம் என்றும் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாபா படம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாபா படத்தில் மட்டும் தான் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதா?. மற்றவை எல்லாம் புத்தர் பற்றிய திரைப்படங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சமுதாய பொறுப்புள்ள மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.