Categories
மாநில செய்திகள்

நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் வசிக்கும் வீடில்லா ஏழைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் தனிக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் வசிக்கும் ஏழைகளை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 2,250 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழைகளும் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் பரிசோதனை கட்டணத்தை ரூ.500ஆக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு புஷ்பா சந்தையநாராயணா அமர்வில் வீடியோ காண்பரென்ஸ் மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனைக் கருவிகளின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது. பரிசோதனைக் கருவிகளை கூடுதலாக கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |